InformationNeeds.com
Home/கட்டுரைகள்/மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளான முன்னுதித்த நங்கை அம்மன் - Munnuthittha Nangai Amman
Spirituality

மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளான முன்னுதித்த நங்கை அம்மன் - Munnuthittha Nangai Amman

December 13, 2024uma224 views

நாகர்கோவிலில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் உள்ளது. கோயில் மூலவர் தாணுமாலயன் என்று அழைக்கப்படுகிறார். இது மும்மூர்த்திகளின் ஆலயம். தாணு சிவனையும், மால் திருமாலையும், அயன் பிரம்மனையும் குறிக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் கோயிலாக இருந்தாலும், நடைமுறையில் சிவன் கோயிலாகவே வழிபடப்படுகிறது.

தலவரலாறு:

பிரமாண்டமான சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்திற்கு அருகில், அழகிய 'முன்னுதித்த நங்கை அம்மன்' கோவில் உள்ளது. முன்னுதித்த நங்கை என்ற பெயர் வரக் காரணம், லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் கணவர்கள் அனுசுயா தேவியின் சக்தியால் குழந்தைகளாக மாற்றப்பட்டனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் சுயரூபம் அடைய அன்னையின் அருளைப் பெறுவதற்காக கடுமையான விரதத்தை மேற்கொண்டனர். ஆதிபராசக்தி அவர்கள் முன் உதித்து அருள்பாலித்ததால் "முன்னுதித்த நங்கை" என்று பெயர் வந்தது.

அமைப்பு

ஆதிபராசக்தியாக விளங்கும் முன்னுதித்த நங்கை அம்மன் கோயில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. இதன் கருவறை ஆறு அழகிய தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. ஆராதனை மண்டபம், மூலஸ்தானத்தைத் தொடும் தெற்குப் பகுதியில் அர்த்த மண்டபம் ஆகியவை இக்கோயிலின் பகுதிகளாகும். இக்கோயிலில், மூன்று அறைகள் உள்ளன. இங்கு உட்பிரகாரமும் வெளிப்பிரகாரமும் அமைந்துள்ளன.இக்கோயிலில் தனி கொடி மரமோ, பலிபீடமோ, ராஜகோபுரமோ கிடையாது. அம்மன் சன்னதி வாயிலில் சுமுகி, சுந்தரி என்ற இரு பெண்கள் துவாரபாலகிகளாக உள்ளனர்.

கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரம் தர்ம சாஸ்தா, பஞ்ச கன்னியர், சிவன், பார்வதி, பூதநாதர், நாகராஜா, காலபைரவர் போன்ற மூர்த்திகளின் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வேதாளம் போன்ற சிலைகளும் வழிபாட்டு மண்டபத்தில் உள்ளன. 135 அடி உயரம், 7 நிலைகள் கொண்ட தாணுமாலயன் கோயிலின் உட்புறச் சுவரில், ராஜ கோபுரத்தில், அம்மனின் வரலாறு அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முன்னுதித்த நங்கை அம்மனின் மகிமையைக் காணலாம்.

கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னை ஆதிபராசக்தியே முன்னுதித்த நங்கை ஆவாள். மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்பது ஞானிகளின் கருத்து. மும்மூர்த்திகளை விட மேலான பரபிரம்மத்தின் ரூபமே ஆதிபராசக்தியின் வடிவம். ஒரு கையில் திரிசூலத்தை ஏந்தி அஷ்டபுஜங்களுடன் அநீதியையும் அக்கிரமங்களையும் அழித்து காலத்தை வெல்லும் கால தெய்வமாக காட்சியளிக்கிறாள்.

சிலையின் சிறப்பு

கோவில்களில் ஐம்பொன் எனப்படும் பஞ்ச லோகத்தால் அல்லது கருங்கல்லால் தெய்வங்களை செதுக்குவது வழக்கம். ஆனால் நங்கை அம்மன் வடிவம் கற்சிலைகள் செய்யத் தொடங்கிய காலத்திற்கு முற்பட்டது என்பதால் அன்றைய வழக்கப்படி கருசர்க்கரை என்ற தெய்வீக மருந்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தானது காவிமண், குந்தரிகம், குலுகுலு சர்க்கரை, கொம்பரக்கு, பசு நெய், செஞ்சயம், எள் எண்ணெய் போன்ற எட்டு விதமான மூலிகைச் சாறுகளைக் கொண்டு இவை தயாரிக்கப்படுகின்றன. இதைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து 'அஷ்டபந்தனம்' எனப்படும். சிற்ப சாஸ்திரம் இதை 'கடுசக்கரை யோக மருந்து' என்கிறது. அத்தகைய சிலைகளுக்கு அபிஷேகம் கிடையாது.

முன்னுதித்த நங்கைக்கும் அபிஷேகம் இல்லை. எனவே, அம்மன் உருவத்தின் முன்னே மாமேரு வடிவிலான சக்கரத்தை பத்ரகாளியாக பாவித்து அபிஷேகம், தீபாராதனை நடத்தப்படுகிறது.

திருவிழாக்கள்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி போன்ற மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் இந்த அம்மனே முதன்மையாக விளங்குகிறாள். பழங்காலத்தில் இருந்து இன்று வரை அம்மன் வீதியுலா காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை இரவு கருமாரியாகவும், இரண்டாவது செவ்வாய்கிழமை சரஸ்வதியாகவும், மூன்றாவது செவ்வாய்கிழமை கேரள பகவதியாகவும், நான்காவது செவ்வாய்கிழமை ராஜராஜேஸ்வரியாகவும், ஐந்தாம் செவ்வாய்கிழமை மகிஷாசுரமர்த்தினியாகவும் அலங்கரிக்கப்படுகிறார்.

ஆடிப்பூர நன்னாளில் அன்னை அவதரித்த புனித நாளாகக் கருதப்படுவதால், அன்றைய தினம் முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பெளர்ணமி நாளிலும், நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

திருவிழாக் காலங்களில் பல்லக்கு, சூரிய பிரபை, சந்திர , படிச்சட்டம், கற்பக விருட்சம், பத்மம், கேடயம், வேதாளம், பெண் பூதம், யானை, காமதேனு, சிங்கம், யாளி, ரிஷபம், குதிரை, அன்னம், மயில் மற்றும் கிளி என பல்வேறு வாகனங்களில் முன்னுதித்த அம்மன் வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சி இருக்கும். நான்கு திசைகளிலிருந்தும் வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது.

முன்னுதித்த நங்கையின் கதை சுசீந்திரம் ஸ்தல புராணத்துடன் தொடர்பு படுத்தி கூறப்படுகிறது. தாணுமாலயன் கோயிலுக்கும் இந்தக் கோயிலுக்கும் உள்ள தொடர்பு காலங்காலமாக இருந்து வருகிறது. அம்மன் கார்த்தியாயினி ஆவாள். எனவே, தாணுமாலயன் கோயில் விழாக்களில் தொடக்கத்திலும், முடிவிலும் சகல மரியாதையுடன் வழிபட வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆதிபராசக்தியாகிய அன்னை முன்னுதித்த அம்மனின் திருவடி பணிவோம், நலமுடன் வாழ்வோம்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளான முன்னுதித்த நங்கை அம்மன் - Munnuthittha Nangai Amman | InformationNeeds