பிரம்ம முகூர்த்த நேரத்தின் சிறப்பும் வழிபாடுகளும் – Brahma Mukurtha time specials and worships
நல்ல நேரம், முகூர்த்த நேரம் என்று ஒவ்வொரு நேரத்தையும் குறிப்பிட்டாலும், அதிகாலை நேரத்தை மட்டும் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்கிறோம். இதற்கு அறிவியல் காரணம் அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சூரியனின் உஷ்ணமோ, சந்திரனின் குளுமையும் முழுவதுமாக இல்லாத மிதமான காலநிலை நிலவும் நேரம் தான் பிரம்ம முகூர்த்த காலம். இந்த நேரத்தில் நமது உடல் இயக்கங்கள் சீராக, பதற்றம் இல்லாமல் இருக்கும். நிதானமும், மனதில் அமைதியும் உண்டாகும். இது நம் மனம் மற்றும் உடலின் இயக்கத்தை சீராக்கி நம்மை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
இந்த நேரம் அனைத்து வகையான நற்செயல்களையும் செய்வதற்கு உகந்த காலமாக கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்தத்தின் போது தியானம் படிப்பு, வேண்டுதல்கள் என எது செய்தாலும் அதன் முழுப் பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டால் பலவிதமான பலன்கள் கிடைக்கும் என்கிறது சாஸ்திரங்கள்.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களைச் செய்யக்கூடிய பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் மும்மூர்த்திகள் எனப்படுவர். அவற்றுள் விஷ்ணு வழிபாடும், சிவ வழிபாடும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றாலும், சுப காரியங்களைச் செய்வதற்கு உகந்த நேரமாக பிரம்ம முகூர்த்தத்தைக் கூறுகிறோம். பிரம்மாவிற்குத் தனி வழிபாடு இல்லையென்றாலும், பிரம்ம முகூர்த்தத்தையே நற்காரியங்கள் செய்ய சிறந்த நேரம் என்று குறிப்பிடுகிறோம்.
பிரம்மாவை நாம் படைப்பின் கடவுள் என்கிறோம். ஒவ்வொரு இரவும் தூங்கும் போது நாம் வேறொரு உலகத்திற்கு செல்கிறோம். தினமும் காலையில் எழுந்திருப்பது மீண்டும் பிறப்பது போன்றது என்று கூறப்படுகிறது. பிரம்மா ஒவ்வொரு நாளும் உலக உயிர்களின் படைப்பைத் தொடங்கும் நேரம் என்பதால் இதை பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடுகிறோம்.
தினமும் இரவு உறங்கி மறுநாள் காலையில் எழுந்திருப்பது இறைவன் கொடுத்த வரம் என்று நன்றியுடன் நினைத்து வழிபட வேண்டியே அதிகாலை வேளையை பிரம்மாவுக்கு உரிய முகூர்த்தம் என்று முன்னோர்கள் நிர்ணயித்துள்ளனர்.
எந்த கிழமையில் என்ன பலன்:
ஞாயிறு - அகல் தீபம் ஏற்றி சத்திய நாராயண பூஜை செய்து பெருமாளை வழிபட்டால் பித்ரு தோஷம், பூர்வ ஜென்ம கர்மங்கள், பாவங்கள், கிரக தோஷங்கள் நீங்கும்.
திங்கள் - அம்பிகையை அகல் விளக்கேற்றி வழிபட்டால் பயம் நீங்கி ஞானம் பெருகும்.
செவ்வாய் - பஞ்சலோக தீபம் ஏற்றி, கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப் பெருமானை வழிபட்டால் நோய்கள் தீரும். கண்திருஷ்டி, செய்வினை ஆகியவற்றின் தொந்தரவுகள் நீங்கும்.
புதன் - குத்துவிளக்கு ஏற்றி துளசி மாலை போட்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்குவர்.
வியாழன் - அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி சித்தர்கள், மகான்கள், குல தெய்வ வழிபாடு செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
வெள்ளி - வெள்ளி தீபம் ஏற்றி, கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபட்டால், செல்வம் பெருகும், கடன்கள் தீரும், அஷ்டலட்சுமிகள் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வார்கள்.
சனி - நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஸ்ரீ ருத்ர மந்திரம் சொல்லி சிவபெருமானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும்.
வழிபாட்டு முறை:
பூஜை அறையில் மண் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி அதில் 2 சிட்டிகை கருப்பட்டி தூள் சேர்த்து பஞ்சு திரியை வைத்து தீபம் ஏற்றவும். இந்த தீபத்தை ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்ற வேண்டும். தினமும் அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை உங்கள் வீட்டில் இந்த தீபம் ஏற்ற வேண்டும். காலையில் எழுந்ததும் குளித்த பின்னரே இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.
தினமும் விளக்கை துணியால் சுத்தம் செய்த பின், அதே விளக்கில் புதிய நெய், கருப்பட்டித் தூள், புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். 48 நாட்களும் புதிய திரி, போட வேண்டும். ஒரு துணியால் சுத்தம் செய்த பின்னரே விளக்கை மீண்டும் ஏற்ற வேண்டும். இது ஒரு எளிய வழிபாடு ஆனால் இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த வழிபாட்டை 48 நாட்கள் செய்து வர நல்ல முன்னேற்றம் தெரியும். ஒரே ஒரு கோரிக்கையை மனதில் வைத்து 48 நாட்கள் தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள்.
